நிலை பேண்தகு அபிவிருத்தி குறிக்கோள்களில்17 குறிக்கோள்களும்(Goals) அதனுடன் தொடர்புடைய சுமார் 169 இலக்குகளும் (Targets) உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள் 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், அவற்றை வெற்றிபெறுவதற்கான இறுதி இலக்கு 2030 ஆம் வருடமாகும். இது 15 வருட காலப்பகுதியைக் கொண்டதாகும்.
நிலை பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அம்சம் அவை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருப்பதாகும். (புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்கு பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு உரித்தானவையாகும்) அவ்வாறே அபிவிருத்திக்காக அதிக துறைகளையும் அதிக இலக்குகளையும் கொண்டிருப்பது பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அபிவிருத்தியாகும். இதுவரை கலந்துரையாடப்படாத பெண்களை வலுவூட்டல் ,சமாதானமும் பாதுகாப்பும் மற்றும் நல்லாட்சி போன்ற எண்ணக்கருக்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எதிர்கால உலகின் அபிவிருத்தித் திட்டங்கள் இப்புதிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும். எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் இந்த இலக்குகளை தமது அபிவிருத்திக் கொள்கைத் திட்டங்களில் உள்ளடக்கக்கூடும். எனினும் இவை ஒரு சவாலாகவே இருக்கும். இந்த இலக்குகளை அடைந்து கொள்ளவேண்டுமானால் இதற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். விளிம்புநிலை வறுமையை ஒழிப்பதற்காக வருடாந்தம் சுமார் 66 பில்லியன் டொலர் நிதி அவசியம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று நீர்,விவசாயம்,போக்குவரத்து,மின்சக்தி போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் தேவைப்படும் நிதியும் மிகவும் அதிகமாகும். மொத்தத்தில் இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வருடாந்தம் மூன்று டிரில்லியன் டொலர்கள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது இங்குள்ள பிரச்சினையாகும். அந்தந்த நாடுகளின் மக்களின் நிதிகளும் உதவி நிதிகளும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும் வரிக்கொள்கையை மாற்றுவதனூடாக தனியார்த்துறையும் ஊழல் மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை நிறுத்துவதனூடாகவும் நிதியங்களை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. எனினும் கடந்த யூலை மாதம் எத்தியோப்பியாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான நிதியங்களை அமைப்பது கடினமானதொன்று என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தவகையில் புதிய இலக்குகளை அடைந்து கொள்வது சவால் மிக்கதாகும். எனினும் இந்த சவாலை வெற்றிகொண்டு பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக உலகின் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதும் உலகின் எதிர்பார்ப்பாகும்.
இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள்
17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் 169 துணையிலக்குகளில் இவை முக்கியமானவையாகும்.
1. வறுமையை அனைத்து முறைகளிலும் அனைத்து இடங்களிலும் முடிவுறுத்துதல்
* பின்தங்கிய வறுமையை (நாளொன்றக்கு 1.25 டொலருக்கு குறைந்த வருமானம் பெறும்) 2030ஆம் ஆண்டளவில் அடியோடு ஒழித்தல்.
* அந்தந்த நாடுகளில் தேசிய சுட்டிகளுக்கமைய வறுமையில் வாடும் மக்களின் தொகையை 2030ஆம் ஆண்டளவில் அரைவாசியாக குறைத்தல்
* 2030ஆம் ஆண்டளவில் வறுமை மற்றும் நலிவுற்ற வகுதி மக்கள் பொருளாதார வளங்களை சமமாக அடையக்கூடியவாறு இருத்தல்
* ஏழ்மை மற்றும் நலிவுற்ற பகுதியினர் காலநிலை தொடர்பான பின்தங்கிய நிலை மற்றும் அனர்த்தங்களின்போது ஏற்படும் தாக்கங்களுக்கு தாக்குப்பிடித்தல்
2. பசியால் வாடுதலை முடிவுறுத்தல், உணவு பாதுகாப்பு மற்றும் உயர் போசாக்கு மட்டத்தை அடைதல், பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துதல்.
*2030ஆம் ஆண்டளவில் மக்கள் பசியால் வாடுவதை முடிவுறுத்தல், அனைத்து மக்கள் பகுதியினருக்கும் பாதுகாப்பான, போசாக்கான, போதுமானளவு உணவு வருடம் முழுவதும் கிடைப்பதை உறுதிசெய்தல்
*2030ஆம் ஆண்டளவில் பல்வேறுவிதமான போசாக்கின்மை நிலையை முடிவுறுத்தல் மற்றும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வயதுக்கேற்ற நிறை இல்லாதிருத்தல் தொடர்பிலான இலக்குகளை 2025 இல் அடைதல்
*2030ஆம் ஆண்டளவில் விவசாய விளைச்சலை இரட்டிப்பாக்குதல், சிறியளவான உணவு உற்பத்தியாளர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கதல்
*2030ஆம் ஆண்டளவில் பேண்தகு உணவுற்பத்தி கட்டமைப்பை உறுதிப்படுத்தல், நெகிழ்வுத்திறன்மிக்க வழிமுறைகளை அமுல்படுத்தல்
*2030ஆம் ஆண்டளவில் விதை, பயிரினங்கள், வளர்க்கும் மற்றும் வீட்டுவிலங்குகள் மற்றும் அவற்றின் மாதிரிகள், இனங்களின் பன்மைத்துவத்தை பாதுகாத்தல்
3. ஆரோக்கியமாமான வாழ்க்கையை உறுதிப்படுத்தல் மற்றும் அனைவருக்கும், அனைத்து வயதிலும் நல்லிருப்பை உறதிப்படுத்துதல்
*உலகளாவிய ரீதியில் தாய்மரண வீதத்தை 2030ஆம் ஆண்டளவில் உயிருள்ள பிறப்புக்கள் 100,000 க்கு 70 ஆக குறைத்தல்
* பிறக்கும் பிள்ளைகளினதும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளினதும் தடுக்கக்கூடிய மரணங்களை 2030ஆம் ஆண்டளவில் முடிவுறுத்துதல், பிறப்பு மரண வீதத்தை 1,000 பிறப்புக்களுக்கு 12 வரை குறைத்தல் மற்றும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரணத்தை 1,000 பிறப்புக்களுக்கு 25 வரை குறைத்தல்
* 2030ஆம் ஆண்டளவில் எய்ட்ஸ், காசநோய், மலேரியா மற்றும் வெப்பமண்டல நோய்களை அடியோடு ஒழித்தல், செங்கமாரி, நீரின் மூலம் பரவும் நோய்கள், தொற்றா நோய்கள் போன்றவற்றை தடுத்தல்
*2020ஆம் ஆண்டளவில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் மற்றும் காயங்களை அரைவாசியாக குறைத்தல்
* பொருத்தமானவாறு புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பில் வரையறுக்கப்பட்ட உடன்பாடுகளை செயற்படுத்தலை வலுவூட்டல்.
4. சமமான, பரம்பலடைந்த (Inclusive)- சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கக்கூடியவாறு) கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதிச்செய்தலும் அனைவருக்கும் வாழ்நாள் பூராகவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு அதனை மேம்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் சுதந்திரமான, சமனான மற்றும் பண்புத்தரமான ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உயர் தரத்திலான முன் பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக பிரவேசித்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புத்தரமுடைய தொழில்நுட்ப, தொழில்சார் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சமமான வாய்ப்பினை உறுதிச்செய்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் சகல இளைஞர் யுவதிகள் மற்றும் வளர்ந்தோரில் குறிப்பிடத்தக்க அளவினர் எழுத்தறிவு, எண்ணறிவு ஆற்றலைப் பெறுவதை உறுதிச்செய்தல்.
* அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் விசேடமாக குறைந்த அபிவிருத்தியைக் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களை அதிகரித்தல்.
5. ஆண்,பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுப்படுத்தல்.
* பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக நிகழும் பொதுவான மற்றும் பொது இடங்களில் நிகழும் சகல வகையான வன்முறைகளையும் முடிவுறுத்தல்.
* அரசியல், பொருளாதாரம் மற்றும், பொது வாழ்க்கையின் சகல மட்டங்களிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் பெண்களின் பரிபூரணமான, உற்பத்தித்திறன் மிக்க பங்கேற்பிற்கும் தலைமைத்துவத்திற்குமான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்தல்.
6. அனைவருக்கும் நீர் கிடைத்தல், பேண்தகு அபிவிருத்தி மற்றும் பொது சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிச்செய்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் பாதுகாப்பானதும், தாங்கக்கூடிய விலையுடையதுமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் சமமான வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல்.
*2030 ஆம் ஆண்டளவில் போதுமான, சமமான பொதுச்சுகாதார வசதிகளை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றுக்கொள்ளல்.
* 2030 ஆம் ஆண்டளவில் நீர் மாசடைதலை குறைத்தல், நச்சு இரசாயனப் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் சேர்ப்பதை நிறுத்துதல், முகாமை செய்யப்படாத கழிவு நீரின் அளவை பாதியாக குறைத்தல், நீரின் மீள்சுழற்சி மற்றும் பாதுகாப்பான மீள்பாவனை மேம்படுத்துதல் என்பவற்றினுௗடாக நீரின் பண்புத்தரத்தினை உயர்த்துதல்
* 2030 ஆம் ஆண்டளவில் சகல துறைகளினதும் நீர் பாவனையின் வினைத்திறனை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தல், நீர் பற்றாக்குறையிலிருந்து மீளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதனூடாக நீர் பற்றாக்குறையினால் துயறுரும் மக்களின் அளவைக் குறைத்தல்.
* நீரண்டிய சூழல்தொகுதிகளை பாதுகாத்தலும், மீளமைத்தலும்.
* நீர் மற்றும் பொது சுகாதார முகாமைத்துவ அபிவிருத்தியின் போது பிரதேச மக்களின் பங்களிப்பை அதிகரித்தலும் உதவியளித்தலும்.
7. ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகரமான, பேண்தகு நவீன வலுசக்தி முறைகளுக்கான பிரவேசத்தை சகலருக்கும் உறுதிப்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகரமான மற்றும் நவீன வலுசக்தியை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய வலுசக்தி முறைகளுள் காணப்படும் மீள புதுப்பிக்கத்தக்க மின்சக்தி முறைகளை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் மின்சக்தியின் வினைத்திறனான வளர்ச்சியை உலகளாவிய ரீதியில் இரு மடங்காக அதிகரித்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் தூய்மையான வலுசக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பினை அதிகரித்தல்.
8. ஏற்றுக்கொள்ளக்கூடிய, உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி, பூரண உற்பத்தித்திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கெளரவமான தொழில்களைப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தல்.
* தேசிய நிலைமைகளுக்கேற்ப தனிநபர் பொருளாதார வளர்ச்சியைப் பேணுதல்,விசேடமாக துறை அபிவிருத்தியுடைய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியின் 7 சதவீத வளர்ச்சியை வருடாந்தம் பேணிச்செல்லல்.
* பல்வகைமை, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் ஊடாக உயர் மட்டத்திலான பொருளாதார உற்பத்திப்பெருக்கத்தை பெற்றுக்கொள்ளல்.
* 2030 ஆம் ஆண்டளவில் உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளாவிய ரீதியில் வளங்களின் வினைத்திறன் வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியில் சூழல் மாசடைதலை முகாமை செய்தலும்.
* தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை மேம்படுத்தல்.
9. மீள்கட்டமைப்பு வசதிகள்,உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில் மயமாக்க மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தல்.
* 2030 ஆம் ஆண்டளவில் உள்ளீர்ப்புகள் மற்றும் பேண்தகு கைத்தொழில் மயமாக்க மேம்பாடு, கைத்தொழில் துறையின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரித்தல்.
*2030 ஆம் ஆண்டளவில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழில்களை விருத்தி செய்வதன் மூலமாக பேண்தகு தன்மை, வளங்களின் பயன்பாட்டில் வினைத்திறனை அதிகரித்தல் தூய்மையான மற்றும் சூழலுக்கு நட்பான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தல்.
10. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.
*நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 40% ஆனோரின் பொருளாதார வளர்ச்சியை 2030 இல் தேசிய பொதுவான மட்டத்தை விடவும் உயர்ந்த மட்டத்தில் பேணுதல்.
* வயது, பால்நிலை, விசேட தேவையுடையோர் போன்ற விடயங்களை கருத்திலெடுக்காது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக 2030 ஆண்டாகும் போது அனைவரையும் உள்ளீர்த்தலை மேம்படுத்தல்.
* நிதி, சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொண்டு கூடுதலான சமத்துவத்தை அடைதல்.
11. நகர மற்றும் மனித குடியிருப்புகளை உள்ளீர்த்தல், பாதுகாப்பு, நெகிழ்திறன் மற்றும் பேண்தகு தன்மையாக மாற்றுதல்
* 2030 ஆகும்போது அனைவருக்கும் போதுமானளவு,பாதுகாப்பானதும் கொள்வனவு சக்திக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய வீட்டுவசதி கிடைப்பததை உறுதிப்படுத்தல்.
* பாதுகாப்பான, கொள்வனவு சக்திக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய, பேண்தகு போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை 2030இல் அனைவருக்கும் வழங்குதல்,வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை மே்படுத்துதல்.
* 2030 ஆகும்போது பேண்தகு நகரமயமாக்கலை மேம்படுத்துதல்.
* உலகில் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை பலப்படுத்துதல்.
* வளியின் தரம், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட அக்கறையுடன் நகரங்களில் தனிநபர் சுற்றாடல் தாக்கத்தை 2030ஆம் ஆண்டளவில் குறைத்தல்.
* வள வினைத்திறன், உள்ளீர்க்கப்படும் தன்மை, காலநிலை மாற்றங்களைத் தடுத்தல் மற்றும் இயைபாக்கம் அடைதல், அனர்த்தங்களுக்கு தாக்குப்பிடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டமிடல் மேற்கொள்வதில் கவனமெடுத்த நகர்சார் மனித குடியிருப்புக்களின் தொகையை 2020ஆம் ஆண்டளவில் அதிகரித்தல்.
12. பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி முறையை உறுதிப்படுத்தல்
* பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பில் பத்தாண்டு சட்டகத்தை செயற்படுத்தல்
* இயற்கை வள பேண்தகு முகாமைத்துவம் மற்றும் வினைத்திறனான பயன்பாட்டை 2030ஆம் ஆண்டளவில் அடைதல்
* சிறு வியாபார நிலையங்கள் மற்றும் நுகர்வு மட்டத்தில் இடம்பெறும் தனிநபர் உணவு வீணாக்கலை 2030ஆம் ஆண்டளவில் அரைவாசியாக குறைத்தல்
* இரசாயனப் பொருட்கள், கழிவுப் பொருட்களை 2020ஆம் ஆண்டளவில் பேண்தகு மட்டத்தில் முகாமைத்துவம் செய்தல்
* தவிர்த்தல், குறைத்தல், மீள்சுழற்சி, மற்றும் மீள்பயன்பாட்டின் ஊடாக கழிவுப் பொருள் உருவாதலை 2030ஆம் ஆண்டளவில் காத்திரமானளவு குறைத்தல்
* பேண்தகு அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் குறைபாடுகளை கண்காணிப்பதற்காக கருவிகளை (Tools) உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்.
13. காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களை தவிர்ப்பதற்காக துரித நடவடிக்கையெடுத்தல்
* காலநிலை மாற்றமடைதல் தொடர்பான அனர்த்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயைபாக்கம் அடையும் ஆற்றலை வலுவூட்டல்
* காலநிலை மாற்றமடைதலைக் குறைத்தல், இயைபாக்கமடைதல், தாக்கங்களைக் குறைத்தல், முன்னெச்சரிக்கை கல்வி, புரிந்துணர்வு மற்றும் ஆற்றலை அதிகரித்தல்
* அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களை தவிர்ப்பதற்காக 2020ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பங்களிப்பில் வருடாந்தம் 100 பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்கும் வாக்குறுதியை செயற்படுத்துதல்.
14. சமுத்திரம், கடல் மற்றும் சமுத்திர வளங்களை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்காக பயன்படுத்துதல்
* அனைத்து வகையிலுமான சமுத்திர மாசடைதலை 2025ஆம் ஆண்டளவில் தடுத்தல் மற்றும் காத்திரமான அளவு குறைத்தல்
* சமுத்திர மற்றும் கரையோர சுற்றாடல் கட்டமைப்பை 2020ஆம் ஆண்டளவில் பேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் பாதுகாத்தல்
* சமுத்திரம் அமிலமயமாதலின் தாக்கத்தை குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல்
* சமுத்திர மீன்பிடித்தல் மற்றும் மிகையாக மீன் பிடித்தல், சட்டவிரோத மீன்பிடி, பாதிப்பேற்படுத்தும் முறைகளின் பயன்பாட்டை 2020ஆம் ஆண்டளவில் வெற்றிகரமாக நிர்வகித்தல்.
15. பெளதீக சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல், மீளமைத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டை மேம்படுத்துதல், வனங்களை பேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்தல், பாலைவனமாதலைத் தடுத்தல், மண்ணரிப்பை நிறுத்தி அதனை மீளமைத்தல் மற்றும் உயிரியல் பன்மைத்துவம் அழிவடைவதனைத் நிறுத்துதல்.
* 2020ஆம் ஆண்டளவில் பெளதீக மற்றும் உள்ளக நன்னீர் சுற்றாடல் கட்டமைப்பை பேணிக்காத்தல், மீளமைத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டை உறுதிப்படுத்தல்
* 2020ஆம் ஆண்டளவில் அனைத்து வனங்களையும் பேண்தகு முகாமைத்துவ மேம்படுத்தல் மற்றும் அமுல்படுத்தல் காடழிப்பை நிறுத்துதல், அழிவடைந்த காடுகளை புனரமைத்தல், மீள் காடாக்கல் மற்றும் காடாக்கலை அதிகரித்தல்.
* 2030ஆம் ஆண்டளவில் பாலைவனமாதலைத் தடுத்தல், அழிவடைந்த நிலம் மற்றும் மண்ணை புனரமைத்தல்
* 2030ஆம் ஆண்டளவில் மலைசார் சுற்றாடல் கட்டமைப்பை பேணிக்காத்தல்
* இயற்கை வசிப்பிடங்கள் அழிவடைவதனைக் குறைப்பதற்காக துரித நடவடிக்கை எடுத்தல், உயிரியல் பன்மைத்துவம் இழக்கப்படுவதனை நிறுத்துதல் மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இனங்களை அருகிவருவதனை நிறுத்துதல்
* வேட்டை, பாதுகாக்கப்பட்ட இனங்களை சட்டவிரோதமாக கொண்டுசெல்லல், சட்டவிரோத வனவிலங்கு பொருட்களின் கேள்வி மற்றும் வழங்கலை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுத்தல்.
* ஆக்கிரமிப்பு இனங்களை அறிமுகப்படுத்துவதனை தடுப்பதற்காகவும் அவற்றின் தாக்கங்களை காத்திரமான அளவு குறைப்பதற்குமான நடவடிக்கைகளை 2020ஆம் ஆண்டளவில் அறிமுகப்படுத்துதல் மற்றும் முக்கியமான ஆக்கிரமிப்பு இனங்களை அழித்தல்
* உயிரியல் பன்மைத்துவம் மற்றும் சுற்றாடல் கட்மைப்பின் பெறுமதியை தேசிய மற்றும் பிரதேச திட்டங்களுடன் சேர்த்தல்
* உயிரியல் பன்மைத்துவம் மற்றும் சுற்றாடல் கட்மைப்பை பேணிக்காத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டுக்காக நிதி வழங்களை அதிகரித்தல்.
16. பேண்தகு அபிவிருத்திக்காக சமாதானமான, உள்ளீர்ப்புக்காக சமூக மேம்படுத்தல் மற்றும் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதற்காக வாய்ப்பை வழங்குதல் மற்றும் வகைகூறலுடன் உள்வாங்கப்பட்ட நிறுவனங்களை அனைத்து மட்டங்களிலும் நிறுவுதல்
* அனைத்து பிரதேசங்களிலும் மோதல்கள் காரணமாக ஏற்படும் மரணங்களை காத்திரமானளவு குறைத்தல்
* பிள்ளைகளுக்கெதிரான அனைத்து வகைகளிலுமான துன்புறுத்தல்கள், துஸ்பிரயோகங்கள் போன்றவற்றை முடிவுறுத்துதல்
* தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சட்த்தின் நிர்வாகத்தை மேம்படுத்துதல்
* அனைத்து மட்டங்களிலும் வகைகூறலுடனானதும் வெளிப்படையானதுமான நிறுவனத்தை விருத்தி செய்தல்
17. பேண்தகு அபிவிருத்திக்கான பூகோளவியல் ஒத்துழைப்பை அமுல்படுத்தல் மற்றும் புதிய உயிரோட்டத்தை வழங்கும் வழிகளை பலப்படுத்துதல்
* உள்நாட்டு வள நகர்வை (mobilization) (ஈடுபடுத்தல்) வலுப்படுத்துதல்
* அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மேலதிக நிதி வளங்களை நகர்த்துதல்
* வடக்கு-தெற்கு, தெற்கு-தெற்கு பிராந்திய மற்றும் சர்வதேச தொடர்புகள் ஊடாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்
* சுற்றாடல் நேயமான தொழிநுட்பங்களை, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்குதல் மற்றும் மேம்படுத்தல்
* அபிவிருதியடைந்துவரும் நாடுகளில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தேவையான ஆற்றல் விருத்திக்காக சர்வதேச ஒத்துழைப்பை வழங்குதல்.
No comments:
Post a Comment